தேனி, ஜூலை 2:
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி நேரில் ஆய்வு செய்தார்.
பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளராக சாகுல் ஹமீது பணியாற்றி வருகிறார். பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரியின் உத்தரவின்படி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி மற்றும் ஊராட்சி செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் அதிகாலை 5 மணியளவில் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆய்வைத் தொடங்கினர்.
ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கும் பகுதிகள், பொது இடங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மரபுக் கழிவுகள் சேகரிக்கும் இடங்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வந்த தூய்மை பணிகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், ஒவ்வொரு தெருவாகச் சென்று வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது லேசான நெகிழிக் கழிவுகள், கடின நெகிழிக் கழிவுகள், காகிதக் கழிவுகள், உடைந்த மற்றும் உடையாத கண்ணாடிக் கழிவுகள், இரும்புக் கழிவுகள், அட்டைக் கழிவுகள், மின் கழிவுகள், மரம் மற்றும் பழைய சாமான்கள் உள்ளிட்ட கழிவுகள் தனித்தனியாக தரம் பிரித்து சேகரிக்கப்படுவதாக விளக்கப்பட்டது.
சேகரிக்கப்பட்ட கழிவுகளில் மறுசுழற்சிக்கு ஏற்ற பொருட்கள் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படுவதுடன், மக்கும் கழிவுகள் உரமாக மாற்றப்பட்டு இயற்கை உரமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி கூறுகையில், “ஊராட்சி பகுதிகளில் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. எனவே, வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” என்றார்.
இந்த ஆய்வில் ஊராட்சி செயலாளர் சாகுல் ஹமீதும் உடனிருந்தார்.