கம்பம், ஜூலை 2:
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற பசுமை திட்டத்தின் கீழ் கம்பம் நகரை பசுமை நிறைந்த அழகிய நகரமாக மாற்றும் நோக்கில் 28,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அதன் முதல் கட்டமாக, கம்பம் ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் உமாசங்கர், நகரமைப்பு அலுவலர் கீதா, சுகாதார அலுவலர் எஸ். மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
மேலும், நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமையை பாதுகாக்கும் உறுதிமொழியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கம்பம் நகரை சுற்றுச்சூழலுக்கு உகந்த, பசுமை வளம் மிக்க நகரமாக உருவாக்கும் நோக்கில் இந்த மரக்கன்று நடவு திட்டம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.