கடலூர், ஜூலை 2: கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 100 இருளர் குடும்பங்களுக்கு தேனீ வளர்ப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு பயிற்சி, தேன் பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் “Pichavaram Mangrove Honey” பிராண்டில் விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது.
தொடர்ந்து, ரூ.14.07 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பிச்சாவரம் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ரூ.25 கோடி மதிப்பிலான உப்பனாறு வடிகால், பிச்சாவரம் ஒழுங்கியம் மறுசீரமைப்பு பணிகளை ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
உப்பனாறு வடிகால் மற்றும் ஒழுங்கியம் புதுப்பிக்கப்பட்டால் சுமார் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் கடல்நீர் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன், பாசன மற்றும் வடிகால் வசதி மேம்படும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கும் வழிவகுக்கும் என்றும் ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.