கோவை
தேசிய பனிச்சறுக்கு போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல் – தங்கம் உட்பட 7 பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை..
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான பனிச்சறுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங்) சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணிக்காக பங்கேற்ற கோவையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டியில், தமிழக அணியின் சார்பில் களமிறங்கிய கோவை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை கைப்பற்றினர்.
போட்டி முடிவில், ஜூனியர் ஆண்கள் பிரிவில் எஸ்.என். ஹசந்த் வெண்கலப் பதக்கம் வென்றார். ஜூனியர் பெண்கள் பிரிவில் பிரதிஷா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆருஸ்ரீ ராஜேஷ் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார். சீனியர் பெண்கள் பிரிவில் வெர்லி நிதுன்யா இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 7 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.
தேசிய போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஐஸ் ஸ்கேட்டிங் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மலர் மாலைகள் அணிவித்து, பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், தேசிய அளவிலான வெற்றி தங்களுக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், விரைவில் 23 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அந்த போட்டியிலும் இந்தியாவிற்கு பதக்கங்களை வென்று பெருமை சேர்ப்பதே தங்களின் இலக்கு என்றும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஐஸ் ஸ்கேட்டிங் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் பனிச்சறுக்கு விளையாட்டின் மீது மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், உரிய பயிற்சி மற்றும் ஆதரவு தொடர்ந்து கிடைத்தால், எதிர்காலத்தில் சர்வதேச அரங்கிலும் தமிழக வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைப்பார்கள் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர்.
கோவை மாணவர்களின் இந்த தேசிய அளவிலான சாதனை, விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.