நாகப்பட்டினம்,ஜூலை.2-
திருமருகல் வட்டாரத்தில் டீசல் இன்ஜின் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறுவை சாகுபடி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள முடிகொண்டான் ஆறு, திருமலைராஜன் ஆறு, அரசலாறு, தெற்கு புத்தாறு, வடக்கு புத்தாறு, நரிமேனி ஆறு, வளப்பாறு உள்ளிட்ட ஆறுகளில் இதுவரை காவிரி பாசன தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த ஆறுகளில் இருந்து பிரிந்து செல்லும் நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்களிலும் பாசனத்துக்கு தண்ணீர் வரவில்லை. இதனால், வாய்க்கால் பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் திருமருகல் பகுதியில் உள்ள அம்பல், பொறக்குடி, கொங்கராயநல்லூர், ஆலத்தூர், திருப்புகலூர், போலகம், சேஷமூலை, திருக்கண்ணபுரம், புத்தகரம் உள்ளிட்ட பகுதி கிராமங்களில் மின்மோட்டார் மற்றும் டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தி, குறுவை நடவுப்பயிர் செய்யும் பணியில் விவசாயிகள் சிரமத்திற்கிடையே ஈடுபட்டு வருகின்றனர்.


இதுகுறித்து திருமருகல் பகுதி விவசாயின் கூறுகையில்:- குறுவை நெற்பயிர் சாகுபடிக்கு வாய்க்கால் பாசனத்தை நம்பி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுவரை தண்ணீர் வராததால், மின்மோட்டாரையும், டீசல் இன்ஜினையும் பயன்படுத்தி நிலத்தடி நீரீன் மூலம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

அடிக்கடி ஏற்படும் மின்தடையால், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தடை ஏற்படுகிறது. இதேபோல், டீசல் இன்ஜினை பயன்படுத்துவோர் அதிக விலை கொடுத்து டீசல் வாங்க வேண்டியுள்ளதால் சிரமம் அடைகின்றனர். எனவே, தொடர்ந்து நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆகையால், மின்மோட்டாருக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், டீசல் இன்ஜின்களை இயக்க மானிய விலையில் விவசாயிகளுக்கு டீசல் வழங்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *