தேனி, ஜூலை 6: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் சிறைக்காடு மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த தெருவிளக்கு வசதி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, தெருவிளக்குகள் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறுகிய காலத்திலேயே அந்தப் பணி நிறைவேற்றப்பட்டது.
இதனால், சிறைக்காடு மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து, மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.
இந்தப் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மக்கத்தம்மாள், ஜெகதீஸ் சந்திரபோஸ், ஊராட்சி செயலாளர் பொட்டு முருகேசன் உள்ளிட்ட ஊராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்தியதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகளை விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.