தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பதவி ஆசை பிடித்தவர்கள்தான் தவெக-விற்குச் சென்றுள்ளனர்: அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமார் பேச்சு.!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலிபாளையம் பகுதியில், அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தொட்டிச்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ். நடராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து செயல்வீரர்களிடையே பேசிய மாவட்டச் செயலாளர் செல்வகுமார் கூறியதாவது:
அதிமுகவை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். அவருக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியை வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும் கட்சியை வழிநடத்தி வருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கேயம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தனது தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளார்.
பதவிக்காகவும், பணத்திற்காகவும் அதிமுகவை ஆட்டிப்படைத்த கூட்டம் தற்போது துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக தவெக-விற்குச் சென்றுவிட்டது. நமது அதிமுக கட்சி மொட்டை மரமானாலும், அந்த மரத்தில் இலைகள் மீண்டும் மீண்டும் துளிர்விடும். பதவி ஆசை பிடித்தவர்கள் சென்றிருந்தாலும், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் இன்னும் கட்சியின் பக்கமே உள்ளனர்.
மூலனூர் அருகேயுள்ள அரிகரன்வலசு கிராமத்தில் கிளைச் செயலாளராகப் பயணித்த என்னை, ஒன்றியச் செயலாளராக பதவி உயர்வு அளித்து, எனது கடின உழைப்பிற்குப் பரிசாக தற்போது தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாராபுரத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் கழகப் பொதுச்செயலாளர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ, அவரை வெற்றி பெறச் செய்ய நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.
தாராபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. இராமலிங்கம் பதவி ஆசைக்காக வீடு வீடாகவும், தெருத் தெருவாகவும் சென்று தவெக-விற்கு ஆள் சேர்த்து வருகிறார். ஆனால், அங்குச் சென்ற அதிமுக நிர்வாகிகள் பலரும் மீண்டும் தாய்க் கழகமான அதிமுகவிற்கே திரும்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களும், எதிர்க்கட்சியினரும் அதிமுக காலியாகிவிட்டதாக பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுக தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் முழுப் பலத்துடன் உறுதியாக உள்ளது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜயை நேரில் பார்க்கக் கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஆனால், இங்கு அடிமட்டத் தொண்டன் கூட எடப்பாடி பழனிச்சாமியை எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்திக்க முடியும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ். நடராஜ், “மக்களுக்கான ஆட்சி நடக்க வேண்டுமென்றால் அது அதிமுக ஆட்சியாக மட்டுமே இருக்க முடியும். பல்வேறு துரோகங்களைச் சந்தித்தாலும் அதிமுக உறுதியுடன் உள்ளது. குண்டடம் மற்றும் வட்டமடை பகுதிகளில் உள்ள ஓடைகளுக்குத் தண்ணீர் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் கிஷோர் குமார், மாவட்ட விவசாய அணித் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வர்த்தகப் பிரிவுத் துணைச் செயலாளர் சேனாபதி, எம்.பி. சண்முகசுந்தரம், ஒன்றியக் கழகச் செயலாளர் பூபதி, பேரவைச் செயலாளர் அர்ஜுனன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் விஜயகுமார், மகளிர் அணிச் செயலாளர் பூங்கொடி, இளைஞரணிச் செயலாளர் சின்னச்சாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் கோபால், வர்த்தக அணிச் செயலாளர் கார்த்தி, ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் சிவசண்முகம், இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் கார்த்தி, கலைப்பிரிவுச் செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.