திருவாரூர்., ஜூலை., 10
பழம்பெருமை மிக்கதும், தொன்மை சிறப்பு வாய்ந்ததும், அறுபடை வீடுகளுக்கு இணையாக அருள் பாலிக்கும் எண்கன் முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு நாட்களாக ஆறு கால பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக இன்று ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆலய சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தக்கடங்களை சுமந்து சென்று, விமான கோபுர கலசத்தில் புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
இந்த கும்பாபிஷேகத்தை காண்பதற்காக திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்செந்தூர், நாகர்கோவில், சேலம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
புகழ்பெற்ற எண்கன் முருகன் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகத் திருவிழாவிற்கு திருக்கோவில் நிர்வாகத்தினர் முறையான ஏற்பாடுகள் செய்யாததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
குறிப்பாக குடிப்பதற்கு குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்தனர். கழிவறை வசதியும் மிகக் குறைவாகவே இருந்ததால் பெரும்பாலான பக்தர்கள், முதியவர்கள் சொல்லொனா துன்பத்திற்கு ஆளாகினர்.
எல்லாவற்றிற்கும் மேலாக கும்பாபிஷேகத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என தெரிந்திருந்தும், முறையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், காவல் துறையினரும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவிலை சுற்றிலும் பொதுமக்கள் நின்று கும்பாபிஷேகத்தை காண்பதற்கு பதிலாக, கோவில் நிர்வாகத்தினர் பணம் வாங்கிக் கொண்டு சாலையோரம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட சிறு சிறு வியாபாரங்கள் நடைபெறுவதற்காக 20க்கும் மேற்பட்ட வாகன விற்பனையகங்ளுக்கு அனுமதி அளித்ததால் கோவிலை சுற்றி பொதுமக்கள் நிற்பதற்கு இடமில்லாமல் தவித்தனர்.
மேலும் கோவில் ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மட்டும் கோவிலின் அருகே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் நிற்பதற்கு வழியில்லாமல் தவித்தனர்.
இதனால் பெரும்பாலான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர். கோவில் நிர்வாகம் தான் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற போதிலும் காவல்துறையினரும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
குறிப்பாக 15 க்கும் குறைவான காவல் துறையினரே இந்த கும்பாபிஷேகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 30-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் மட்டுமே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக காலை 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற நிலையிலும், மதியம் ஒரு மணி வரை போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. கடும் வெயில் அடித்த நிலையிலும் அங்கே இருந்து நகர முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.
ஒரு கட்டத்தில் கை குழந்தையுடன் வந்த பெற்றோர்கள் தங்கள் கைக்குழந்தையுடன் வயலில் இறங்கி நடந்து சென்றது வேதனையை ஏற்படுத்தியது. மூன்று மணி நேரத்திற்கு மேலாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெருசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஒட்டுமொத்தமாக திருக்கோவில் நிர்வாகமும் திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் முறையான ஏற்பாடுகளை செய்யாததால் கும்பாபிஷேகத்தை காண வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தது மட்டுமல்லாமல், ஏன் கும்பாபிஷேகத்திற்கு வந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு காவல்துறை நடவடிக்கைகள் இருந்ததாக பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.