தாராபுரம்
செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில் மாணவர் பேரவைப் பொறுப்பேற்பு விழா.

தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில் 2025–26 கல்வியாண்டிற்கான மாணவர் பேரவைப் பொறுப்பேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி இறைவழிபாட்டுப் பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு தலைமை மாணவி மாயா முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.

விழாவில் இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முனைவர் இரமேஷ் சண்முகம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். அவரை ஆங்கில ஆசிரியர் முனைவர் அமல் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பள்ளி முதல்வர் மு. ஞானபண்டிதன், முதன்மை விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

பின்னர், பள்ளி மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை நிர்வாகிகளுக்கு பதக்கங்கள், பொறுப்புச் சான்றிதழ்கள் மற்றும் தோள்பட்டைக் கச்சைகளை மேஜர் ஜெனரல் (ஓய்வு) முனைவர் இரமேஷ் சண்முகம் அணிவித்து பொறுப்பேற்கச் செய்தார். மேலும் GLADIATORS, HORATIUS, VANQUISHERS ஆகிய அணிகளின் ஆசிரியர் தலைவர்கள் தங்கள் அணித் தலைவர்களுக்கு பதக்கங்களையும் தோள்பட்டைக் கச்சைகளையும் அணிவித்து வாழ்த்தினர். தொடர்ந்து மாணவர் பேரவைப் பொறுப்பாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சிறப்புரையாற்றிய மேஜர் ஜெனரல் (ஓய்வு) முனைவர் இரமேஷ் சண்முகம், மாணவர்களின் தலைமைத்துவத் திறனையும், ஆங்கில மொழிப்புலமையையும் பாராட்டினார். தாராபுரம் போன்ற பகுதியில் பன்னாட்டுத் தரத்திற்கு இணையாக பன்முகத் திறன்களை வளர்க்கும் பள்ளி இயங்குவது பெருமைக்குரியது என்றார். மேலும், சிறந்த தலைவர் என்பவர் மனிதநேயமிக்கவராகவும், பிறரை மதிக்கும் பண்புடையவராகவும் இருக்க வேண்டும் என்றும், தலைமைத்துவத் திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாணவத் துணைத் தலைவர் கபீந்திரா மற்றும் மாணவத் துணைத் தலைவி இராகபைரவி ஆகியோர் ஏற்புரை வழங்கினர். பள்ளி இசைக்குழுவினர் தலைமைத்துவப் பண்புகளை எடுத்துரைக்கும் பாடலை வழங்கினர்.

பள்ளி முதல்வர் மு. ஞானபண்டிதன் தனது உரையில், “தலைவர்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள். தனக்காக மட்டுமல்ல, சமூக நலனுக்காகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுபவர்களே உண்மையான தலைவர்கள். மாணவர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி உறுதியுடன் செயல்பட்டு தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி, புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாணவர் தலைவர் ஹரிகரன் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண் இசைக்கப்பட்டதையடுத்து விழா நிறைவடைந்தது.

விழாவில் பள்ளித் தலைவர் சிதம்பரம், துணைத்தலைவர் ரங்கசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சபாபதி, இயக்குநர் செல்வராஜ், அறங்காவலர்கள் ஆறுமுகம், சிவநேசன், சிவசாமி, மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய மாணவர் பேரவைப் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *