எஸ். திருபாலா
அந்தியூர் நிருபர்

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி, நேற்று, அந்தியூர் தாசில்தாரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்துக்கு பர்கூர் ஊராட்சி, மேற்கு மலையில் உள்ள தாளக்கரை பகுதியில் பெய்யும் மழை நீர் ஆதாரமாக விளங்குகிறது. வரட்டுப்பள்ளம், கல்லுப்பள்ளம், கும்பரவாணி பள்ளம் ஆகிய நீர் பிடித்து பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் தண்ணீரால் அணை நிரம்புகிறது.


ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அணை நிரம்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அணையை நம்பி, பழைய மற்றும் புதிய ஆயகட்டு பாசனத்தின் மூலம், 3,000 ஏக்கர் விவசாய நிலம் நேரடியாகவும், 3.000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு மறைமுகமாகவும் பயன் பெறுகிறது.
அணையிலிருந்து மார்ச் மாதம் புதிய ஆயக்கட்டான வாய்க்கால் பாசனத்துக்கும், ஜனவரியில் பழைய ஆயக்கட்டான ஏரி பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும், கெட்டிசமுத்திரம், அந்தியூர் உள்ளிட்ட ஐந்து ஏரிகளில் தண்ணீர் போதுமான இருப்பு இருக்கும் கால கட்டங்களில், தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது.
கடந்த 2013ல், விவசாயிகளின் கோரிக்கை ஏற்ற அரசு, அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியது. இதன் மூலம், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றனர். இந்நிலையில், நடப்பாண்டு வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


நேற்று, அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் சக்திவேலிடம், மண் அள்ள அனுமதி கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது;
கடந்த 2013ம் ஆண்டு, வரட்டுப்பள்ளம் அணையில் மண் அள்ள அனுமதியளிக்கப்பட்டதால், விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி பயன் பெற்றோம். மண் அள்ளி 12 ஆண்டுகள் ஆன நிலையில், திட்டு திட்டாக வண்டல் மண் காணப்படுகிறது.


கோடை காலங்களில் நீர் குடிக்க வரும் யானைகள் சேற்றில் புதையும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவும், அதிகளவு தண்ணீரை தேக்கி வைக்கவும், விவசாயிகளின் நலன் காக்கவும், மண் அள்ளுவதற்கு அரசு அனுமதியளிக்க வேணடும்.


இதனால், விவசாயத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள விவசாயிகள் பயன் பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர். தற்போது, அணையின் நீர்மட்டம் 24 அடியாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *