நாகப்பட்டினம்,ஜூலை.10-
நாகை மாவட்டம் திருமருகலில் சந்தைப்பேட்டை கடைத்தெரு சாலை முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் இருபுறத்திலும் ஆக்கரமிப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
எனேவ ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நோட்டிஸ் வழங்கினர். அதனை தொடர்ந்து கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இதையடுத்து நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அய்யாதுரை, உதவி பொறியாளர் முருகானந்தம், தாசில்தார் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், ஹரிகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் வியாபாரிகளிடம் சமரசம் செய்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். பின்னர் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அவர்களை எச்சரித்தனர்.