காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

ஊதியூர் அருகே குடிநீர்க் குழாய் உடைப்பால் சாலையில் வழிந்தோடும் குடிநீர்.

ஊதியூர் அருகே குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் காவிரி கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் வாரக்கணக்கில் வெளியேறி வீணாகி வருகிறது.

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி ஆற்றில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில் இருந்து பம்பிங் ஸ்டேசனிலிருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு முத்தூர், காங்கயம், ஊதியூர் வழியாக குண்டடம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும் தண்ணீர், அவ்வப்போது கசிவு ஏற்பட்டு வெளியேறி வீணாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் குண்டடம் ஒன்றியத்தின் எல்லையோர ஊராட்சிப் பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் விநியோகம் செய்வதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. பொதுமக்கள் தரப்பில் தண்ணீர் கசிவை நிரந்தரமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், ஊதியூர் அடுத்துள்ள குண்டடம் பிரிவிலிருந்து சற்று தூரத்தில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக குடிநீர்க் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் கசிவு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் வெளியேறி, அருகில் உள்ள காட்டிற்குள் சென்று தேங்கி வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு மேல் இந்த இடத்தில் மட்டும் வெளியேறி வீணாகி வருகிறது.

தற்போது குடிநீர் ஆதாரமாக உள்ள ஊராட்சி ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போய், குடிநீருக்காக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், காவிரி தண்ணீர் வெளியேறி வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தில் உடனடியாக ஆய்வு செய்து, தண்ணீர் கசிவை சரிசெய்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *