நாகப்பட்டினம்,ஜூலை.23-
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே மாரைக்கன்சாவடியில் தனக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 2 பேர் மீது திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேந்தன். இவருக்கு மாரைக்கன்சாவடி பகுதியில் சொந்த நிலம் உள்ளது. அந்த நிலம் தொடர்பாக கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அத்துமீறி யாரும் நுழையக் கூடாது என்பதற்காக கடந்த ஜூலை 13-ஆம் தேதி சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பெயர் பலகையை நிறுவியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 15-ஆம் தேதி மாலை அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, பெயர் பலகை கிழித்து சேதப்படுத்தப்பட்டிருந்ததுடன், அதன் இரும்பு பிரேமும் காணாமல் போயிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அதே இடத்தில் பழனியப்பன், மல்லிகா ஆகியோரின் பெயரில் மற்றொரு பலகை வைக்கப்பட்டிருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, பனங்குடி சேர்ந்த பழனியப்பன் மற்றும் அவரது மகன் ராமமூர்த்தி ஆகியோர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக தெரியவந்ததாக தமிழ்வேந்தன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, தமிழ்வேந்தன் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் பழனியப்பன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.