காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.
புராண காலத்தில் ஒரு சுக்ரவாரத்தில் பகீரத மன்னனுக்கு முருகப்பெருமான் வல்லக்கோட்டையில் காட்சியருளி அவனுக்கு அரசாட்சியை அருளியதாக வரலாறு. அன்றைய தினம் வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை வல்லக்கோட்டை முருகன் அருளுவதாக நம்பிக்கை. அதனால் சுக்ரவாரம் எனும் வெள்ளிக்கிழமையன்று இத்திருக்கோயிலுக்கு ஆறு வாரங்கள் வந்து வழிபட்டு உயர்ந்தநிலை அடைந்தோர் பலராவர்.
அந்த வகையில் கோடை காலம் நிறைவு பெற்று மழைக்காலம் துவங்கிய பின்னரும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை ஏதும் இல்லாமல் அவ்வப்போது லேசான மழையே பெய்து வருகிறது. மழை நின்ற பிறகு வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி வருண யாக பூஜை இன்று நடைபெற்றது.
இன்று அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டது. மூலவர் முன்பு கோ பூஜை செய்யப்பட்டது.
பிறகு மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெற்றிலை, சாமந்தி மலர்மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார். பிறகு 16 விதமான தீபாராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ரோஜா, சாமந்தி, கதிர்பச்சை, படிமாலை அணிந்து ராஜ அலங்காரத்தில் அவர் காட்சியளித்தார்.
சஷ்டி மண்டபத்தில் சத்ரு சங்கார திரிசதீ யாகம் தொடங்கியது. ஆறு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதிட சிறப்பு பூஜைகள் அர்ச்சனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. இதில் வருணபகவானுக்குரிய மந்திரங்கள் சொல்லப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் ஒரு மணிநேரம் வரிசையில் சென்று மூலவர் மற்றும் உற்சவரை வழிபட்டனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் முதலிய ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.