நாகப்பட்டினம்,ஜூலை.24-
திருமருகல் அருகே சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் 5 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சாலை நடுவே பள்ளம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினக்குடி -இடையாத்தங்குடி இடையே முக்கிய சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை வழியாக இடையாத்தங்குடி, சேஷமூலை, கணபதிபுரம், தென்பிடாகை, ஏர்வாடி, பரமநல்லூர், கிடாமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் இந்த சாலை வழியாக திருமருகல் வந்து செல்கின்றனர். அதேபோல் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆதினக்குடியில் இடையாத்தங்குடி சாலை திரும்பும் இடத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டு உள்ளது. இதனால் நாகப்பட்டினம்-மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்ட பஸ் கடந்த 10 மாதமாக இயக்கப்படவில்லை. பஸ் வசதி இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வு நேரம் என்பதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைக்கவும், பாதியில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *