திருவாரூர்., ஜூலை. 24

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர்கள் அணி சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான கோரிக்கையாக தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற அனைத்து கடன்களை தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், குறுவை விவசாயம் பொய்த்த நிலையில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், அதனை கண்டுகொள்ளாத தவெக அரசை கண்டித்தும் வெயிலால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பேசிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் பேசும்போது…

ரீல் விட்டுக்கொண்டே திரியும் அரசாக இந்த தமிழக வெற்றிகழக அரசு இருக்கிறது. முதலமைச்சர் சொன்னதைத்தான் கேட்கிறோம். அவர் சொல்லாததை கேட்கவில்லை. தற்போது தண்ணீர் வராத நிலையில் விவசாயம் செய்ய முடியாத விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என அறிவித்துவிட்டு 7000 ரூபாய் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தார்.

“சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது” என விவசாயிகள் ஒரு பழமொழியை கூறுவார்கள். அது போல சிறுபிள்ளைகளாக சேர்ந்து ஒரு அரசை உருவாக்கி சிறுபிள்ளை தனமாக இருக்கிற முதலமைச்சர் இருக்கும் தமிழ்நாட்டில்‍, சிறுபிள்ளை வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராது என்பதை பதிலாக வெள்ளாமை செய்ய வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் நடனமாடிக் கொண்டிருக்கிறார். விவசாயிகள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காத சூழல் நிலவி வருகிறது. எதுவுமே தெரியாத ஒருவர் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

தமிழ்நாட்டில் தற்போது குடிதண்ணீர் பிரச்சனை வந்துவிட்டது. ஆறுகளில் தண்ணீர் வந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது ஆற்றில் தண்ணீர் வராத காலகட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு மிக மோசமாக ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் எல் நினோ தாக்கம் வரப்போகிறது.

எந்த சமயத்தில் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றாரோ தெரியவில்லை, வறட்சி வந்தது, எல் நினோ வருகிறது, பட்டினி சாவு வரப்போகிறது, என ஒரு மோசமான சூழல் உண்டாகிறது.

விவசாய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறவில்லை நீங்கள் தான் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்கிறோம் என அறிவித்தீர்கள். அதை நீங்கள் சொல்வது தான் நாங்கள் கேட்கிறோம்.

விவசாய கடன் தள்ளுபடி மட்டுமா கூறினார்..? தற்போது இருக்கிற முதலமைச்சர் எனக்கு அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நான் விவசாயி வீட்டு மகனான பிறக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

இது ஒரு ஆரம்ப கட்ட போராட்டம் தான் அடுத்ததாக அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் கடன் தள்ளுபடி என அறிவித்திருக்கிறார்கள், ஒவ்வொரு குடும்பத்திலும் மனைவி மகள்கள் பெயரில் கடன் இருக்கும். ஒரு ரேஷன் கார்டில் ஒருத்தவருக்கு மட்டும் தான் கடன் தள்ளுபடி என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

முதல்வருக்கு பொண்டாட்டி பிள்ளை இல்லை என்றால் விவசாயிகளுக்கு பொண்டாட்டி பிள்ளை இருக்கமாட்டார்களா..? அவர்களது பெயரில் கடன் வாங்காமல் இருப்பார்களா..? என கேள்வி எழுப்பினார்.

நோட்டீஸ் ஒட்டிக்கொண்டு இருக்கும் தமிழக வெற்றி கழகப் பிள்ளைகளுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியப்போகிறது என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000-க்கும் திமுகவினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *