கடத்தூர், ஜூலை 23
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்–ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான மாவிளக்கு ஊர்வலம் நேற்று மாலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் தீச்சட்டி, மாவிளக்கு ஏந்தியும், 16 அடி உயரம் கொண்ட அழகுக்குத்தி பூங்கரகத்தை சுமந்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தாரை, தப்பட்டை முழங்கியும், வானவேடிக்கை வெடித்தும் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
கடத்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் கோவிலில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் கடத்தூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.