செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆணைக்குன்னம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில், ஆயுஷ் நல வாழ்வு மையம் சார்பில் சிறப்பு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆயுஷ் நல வாழ்வு மையத்தின் சித்த மருத்துவர் புனிதா தலைமை வகித்தார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் முத்தம்மாள், பள்ளித் தலைமையாசிரியர் ஜமுனா, கிராமப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம், நோய் வராமல் தடுக்கும் வாழ்க்கை முறைகள், அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடல்நல பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும், கிராம பொதுமக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்றுப் பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்கள் வழங்கப்பட்டு, தாய் மற்றும் குழந்தை நலன் குறித்த அறிவுரைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், கிராம மக்களின் உடல்நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு யோகா மற்றும் உடற்பயிற்சி பயிற்சிகளும் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் நோய் தடுப்பு நெறிமுறைகள் குறித்து அறிந்து பயனடைந்தனர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் திரளான கிராம பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.