தஞ்சாவூர், ஜூலை 29:
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ராமாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜயசுந்தரத்தின் மகன் சிவகுமார், மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமைக்காவலராக பணியாற்றி வந்த நிலையில், பணியிடத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகுமார், ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா மாவட்டக் காவல் படை முகாமில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 92-வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். பணியில் இருந்தபோது இரவு நேரத்தில் திடீரென மயக்கமடைந்த அவரை சக பணியாளர்கள் உடனடியாக ஹந்த்வாரா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த சிவகுமாருக்கு, எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் சுடர்வாணன் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் மகள் கலை யாழினி சாய் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
சிவகுமாரின் உடல் இன்று காலை மதுக்கூரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சோப்பூர், ஸ்ரீநகரைச் சேர்ந்த அவில்தார் ஜி.டி. கமலக்கண்ணன் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
தஞ்சாவூர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் துணை இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் ஞானசேகர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த சிவகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், கோயம்புத்தூரைச் சேர்ந்த 105-வது ஆர்ஏஎஃப் (Rapid Action Force) அணியினர் அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தினர். மதுக்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்று வீரருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.