தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தமிழ்நாடு காவல்துறை, தாராபுரம் போக்குவரத்து காவல்துறை மற்றும் தாராபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அதில், “ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு! இதுவே உனது உயிர்க்காப்பு!!”, “சாலையில் அலைபேசி – ஆபத்தாகும்; நீ யோசி!!”, “சாலையில் பேசாதே கைபேசி; உயிருக்கு ஆபத்து என்பதை யோசி!!”, “சாலையில் போதை – மரணத்தின் பாதை!!”, “படியில் பயணம் – நொடியில் மரணம்!”, “ஓடும் பேருந்தில் ஏறாதே! உயிரைப் பணயம் வைக்காதே!!” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், சாலை விதிகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டிய பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டன. ஊர்க்காவல் படையினருக்கு ஹெல்மெட்டுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் பேசுகையில், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தாலே பெரும்பாலான சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், “ஹெல்மெட் என்பது உயிரைப் பாதுகாப்பதற்கான கருவி மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும்” என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் ராமச்சந்திரன், போக்குவரத்து ஆய்வாளர் மகேஸ்வரன், துணை ஆய்வாளர் நந்தகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தாராபுரம் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த பாண்டியன், சமூக ராஜன், கே.எஸ். வரதராஜன், டி. லோகநாதன், சுடரமணி, முருகேஷ் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.