வி தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு அதன் அமைப்பின் தலைவர் அண்ணாமலையால் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கன்னியாகுமரி, உவரி மற்றும் குலசேகரன்பட்டினம் கடற்கரைகளில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைப்பின் தலைவர் அண்ணாமலை, பின்னர் தூத்துக்குடி மாநகரின் திரேஸ்புரம் பகுதிக்கு வருகை தந்தார். அங்கு பொதுமக்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, அண்ணாமலை பேசுவதற்கு முன்பு தூத்துக்குடியில் பலத்த மழை பெய்தது. இருப்பினும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். மழையிலிருந்து தப்பிக்க செல்லாமல், நாற்காலிகளைத் தலையில் பிடித்தபடியே பொதுமக்கள் அவரது பேச்சைக் கவனமாகக் கேட்டனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய அண்ணாமலை, “ஆகஸ்ட் 1 முதல் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை சுமார் 175 கிலோமீட்டர் நீளமான கடற்கரையை 365 நாட்கள் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளோம். ஓராண்டுக்குப் பிறகு இந்தியாவிலேயே முன்மாதிரியாக இருக்கும் அளவுக்கு இந்த கடற்கரையை மாற்றிக் காட்டுவோம். இது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல மக்களின் பங்களிப்புடன் நடைபெறும் மக்கள் இயக்கம் இது.
இந்த மக்கள் இயக்கம் செயல் மூலம் மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெறுவதாகும். அதேபோல், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. செய்த பணிக்குக் கூலியாக வருண பகவான் மழையாக நமக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்…
தூத்துக்குடியில் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் அரசியல் குறித்து விரிவாகப் பேசுவோம். இன்று அதைப் பற்றி பேச விரும்பவில்லை” என்று தெரிவித்தார்..