சுற்றுலா துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் மற்றும் பயண முகவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், டிராவல் ஏஜென்ட் அசோசியேஷன் ஆஃப் கோயம்புத்தூர் (TAAC) சார்பில் இரண்டாவது லக்சுரி டிராவல் ஷோ கண்காட்சி கோவையில் நடைபெற்றது…
இந்த கண்காட்சியை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ். சதீஸ் ரிப்பன் வெட்டி, தொடங்கி வைத்தார்.
பின்னர் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டு, சுற்றுலா நிறுவனங்களின் சேவைகள், புதிய சுற்றுலா திட்டங்கள் மற்றும் பயண வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
விழாவில் கோவை சர்வதேச விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப், இந்திய சுற்றுலாத் துறையின் உதவி இயக்குநர் பத்மாவதி, தேவகி தியாகராஜன், தென்னிந்திய மண்டலத் தலைவர் கே. பாண்டியன்,மற்றும் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.. .
கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி சுற்றுலா நிறுவனங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பயண சேவை நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, புதிய சுற்றுலா தொகுப்புகள், வெளிநாட்டு பயண திட்டங்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் பயண சேவைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தன.
சுற்றுலாத் துறையில் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த லக்சுரி டிராவல் ஷோ நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதில் சுற்றுலா துறை தொடர்பான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், சுற்றுலா ஆர்வலர்கள், பயண முகவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.