செங்கல்பட்டு, ஆக. 5:

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எடையாளம், புதிய எடையாளம், பழைய எடையாளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அன்றாட தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அப்பகுதியில் உள்ள கிணறுகளை தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், கூடுதலாக புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளதாகவும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, எடையாளம் ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, தமிழக அரசும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *