தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

மூலனூர்,

மூலனூர் வட்டார விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டு முக்கிய திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் இவ்விரு திட்டங்களையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான காரீப் பருவத்தில், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மூலனூர் வட்டாரத்தில் வெங்காயப் பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்ய மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மூலனூர் வட்டாரத்திற்கு வெங்காயப் பயிர்க் காப்பீட்டிற்காக 23 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இயற்கை பேரிடர்கள், வறட்சி, அதிக மழை, வெள்ளம், புயல், பலத்த காற்று, ஆலங்கட்டி மழை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு பெறும் வகையில் உடனடியாக பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தோட்டக்கலைத்துறையின் சார்பில் சிறுதோட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.50 மதிப்பில் 5 வகையான காய்கறி விதைத்தொகுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை உள்ளிட்ட காய்கறி விதைகள் இடம்பெற்றுள்ளன. வீடுகள் மற்றும் பள்ளிகளில் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்து, குடும்பங்களின் காய்கறித் தேவையை பூர்த்தி செய்வதுடன், சத்தான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரு திட்டங்களையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மூலனூர் வட்டாரத்தில் வெங்காயப் பயிர்க் காப்பீட்டிற்கான 23 ஹெக்டர் இலக்கை முழுமையாக எட்டுவதற்கும், அதிகளவில் விவசாயிகள் முன்வருமாறு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், மூலனூர் அல்லது சம்பந்தப்பட்ட தோட்டக்கலை அலுவலர்களை தொடர்புகொள்ளலாம்.

“பயிரைக் காப்போம் – வருமானத்தை பாதுகாப்போம்; வீட்டுத் தோட்டம் அமைப்போம் – ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குவோம்” என தோட்டக்கலைத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *