செங்கல்பட்டு, ஆக. 6:

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களை குடியிருப்பு பகுதியில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் நகரில் நீண்ட காலமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே வருவாய்த் துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 60 குடும்பங்கள் பட்டா வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேன்பாக்கம் ஊராட்சியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான 67 சென்ட் நிலத்தை கிராம மக்கள் பல ஆண்டுகளாக சுடுகாடாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிலத்தின் உரிமையாளர் காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை நாடி, தனது நிலத்தை மீட்டுத் தருமாறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனிநபருக்கு நிலத்தின் மதிப்பீட்டுத் தொகையை வழங்கவோ அல்லது மாற்று இடம் ஒதுக்கி வழங்கவோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, செய்யூர் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழு, அம்பேத்கர் நகர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலத்தை மாற்று இடமாக தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பேத்கர் நகரில் வசிக்கும் பொதுமக்கள் ஆதிதிராவிடர் நகரின் முதன்மைத் தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “நாங்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களை இங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. எங்கள் வாழ்வாதாரத்தையும் குடியிருப்பையும் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தனிநபருக்குச் சொந்தமான நிலம் சுடுகாடாக பயன்படுத்தப்பட்டதால், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாற்று இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்பேத்கர் நகரில் தற்போது வசித்து வரும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *