செங்கல்பட்டு மாவட்டம்:
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, “போதை இல்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் அருகே பாபுராயன்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதில் 3 வயது முதல் 10 வயது வரையிலான சிறுவர்களுக்கு 6 கிலோமீட்டர் தூரமும், 11 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 11 கிலோமீட்டர் தூரமும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மாரத்தான் போட்டியை ஒன்றியக் குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மேலும், மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். வேளாண் அறிவியல் கல்லூரி டீன் ஜவஹர், பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.