தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூர்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் “விழுதுகள்” சார்பில், வட்டார அளவிலான ஒருங்கிணைந்த இலவச மறுவாழ்வு சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மூலனூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எம். கார்த்திக் குமார் (BE, MBBS) தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி புதிய மறுவாழ்வு சேவை மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்பொதுமக்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயன்முறை சிகிச்சையாளர் விஜய் அவர்கள், “விழுதுகள்” மையத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள இலவச மறுவாழ்வு சேவைகள் குறித்து விளக்கினார்.
மேலும், வட்டார ஒருங்கிணைப்பாளர் க. அருள்முருகன், உளவியல் ஆலோசகர் எம். முருகானந்தம், சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் ஆகியோர், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் இலவச மறுவாழ்வு உதவிகள், நலத்திட்டங்கள், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தற்போது நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு கணக்கெடுப்பு குறித்தும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், இயன்முறை சிகிச்சையாளர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வட்டார ஒருங்கிணைப்பாளர் க. அருள்முருகன் நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து விழா இனிதே நிறைவடைந்தது.