தஞ்சாவூர்: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தஞ்சாவூரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். அவருக்கு ஆதரவாக பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 14-ஆம் தேதி காலை 9 மணியளவில் தஞ்சாவூர் வருகை தர உள்ளார். தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை எனக் கூறி, அதிமுக சார்பில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்கும் வகையில், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி சார்பில் ஏறத்தாழ 3 ஆயிரம் பேரை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய தமிழக அரசு விவசாயிகளுக்காக போதிய திட்டங்களை அறிவிக்கவில்லை என்றும், தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு இரண்டு முறை மானியம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வரும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் தஞ்சாவூர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்று ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அதிமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *