நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை குனியமுத்துாரைச் சேர்ந்த கலைஞர் யூ.எம்.டி. ராஜா, கோழி முட்டை ஓட்டின் உள்பகுதியில் தேசத் தலைவர்களின் உருவங்களை மிக நுட்பமாக வரைந்து அசத்தியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், உடைக்கப்பட்ட கோழி முட்டையின் மிகச்சிறிய உள்பகுதியில், சிறிய பிரஷ்ஷைப் பயன்படுத்தி தேசத்தந்தை மகாத்மா காந்தி, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகிய மூன்று தலைவர்களின் எழிலார்ந்த ஓவியங்களை அவர் வரைந்துள்ளார்.
அத்துடன், சுதந்திர உணர்வை பறைசாற்றும் விதமாக “எண்பதாவது சுதந்திர தினம்” என்ற தமிழ் வாசகத்தையும் முட்டையின் உள்பகுதியிலேயே மிக நுட்பமாக எழுதி செதுக்கியுள்ளார். வழக்கமாக வெளிப்புறத்தில் வரைவதையே சவாலாகக் கருதும் ஓவியர்களுக்கு மத்தியில், முட்டையின் உட்புறத்தில் வரைந்துள்ள இந்த அரிய கலைப்படைப்பு காண்போரை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.