தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

சோலார் மின் கம்பங்கள் சாலை ஓரத்தில் பதிப்பதாக புகார்: கிராம மக்கள் போராட்ட எச்சரிக்கை

தாராபுரம், ஆக. 12:

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த நொச்சிபாளையம், கொழுமங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட காசிலிங்கம்பாளையம் பகுதியில், சோலார் நிறுவனத்தினர் சாலை ஓரத்தில் மின் கம்பங்களை பதித்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குல்லாய்பாளையம் முதல் ராசிபலயம் வரை வரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு சோலார் மின் இணைப்புக்காக கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், மாவட்டம் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி சாலை ஓரங்களில் கம்பங்கள் பதிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறுகிய சாலையின் இருபுறங்களிலும் கம்பங்கள் பதிக்கப்படுவதால் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்படுவதாகவும், குறிப்பாக பள்ளி நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளி பேருந்துகள் எதிரெதிரே வரும்போது, அவற்றை பின்புறமாக இயக்கி திருப்ப வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கூறினர்.

மேலும், சாலை ஏற்கனவே பழுதடைந்துள்ள நிலையில், கல்குவாரிகளுக்கு செல்லும் லாரிகள் மற்றும் பேருந்துகள் செல்லும்போது சாலையின் இருபுறமும் போதிய இடவசதி இல்லாததால் வாகனங்கள் ஒதுங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஏ.ஜி.எஸ். சோலார் நிறுவனத்திடம் பலமுறை தெரிவித்தும், கம்பங்கள் திட்டமிட்டபடியே பதிக்கப்படும் எனக் கூறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு காவல்துறையை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் கூறுகையில்:

“பல கிலோமீட்டர் தூரத்திற்கு சோலார் மின் கம்பங்கள் சாலை ஓரத்தில் பதிக்கப்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து அனுமதி பெற்று பணிகள் நடைபெறுவதாக நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், சாலையில் இருந்து பல அடி தள்ளி கம்பங்களை பதிக்க வேண்டும் என்று பஞ்சாயத்து சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. சாலை ஓரத்திலேயே கம்பங்களை பதிக்க எந்தவித அனுமதியும் இல்லை என தெரிவித்தபோதும், காவல்துறையை வைத்து எங்களை மிரட்டும் நிலை உள்ளது.

கிராமப்புற சாலைகளில் எதிர்காலத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். தற்போது சாலையின் இருபுறமும் கம்பங்கள் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் சாலை விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்படும். இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

எனவே, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *