தேனி: தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமாக மனு அளித்தனர்.

மனுவில், தேனி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கைகளான திண்டுக்கல்–சபரிமலை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துதல், தமிழகம்–கேரளாவை விரைவாக இணைக்கும் தேவாரம்–சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தை நிறைவேற்றுதல், தென் மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக போலீசாருக்கு பாதுகாப்பு உரிமையை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி உள்ளிட்ட முக்கிய ஊர்களை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தத் திட்டங்கள் தேனி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்ட மக்களின் போக்குவரத்து, விவசாயம், குடிநீர் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மனுவை பெற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *