குண்டடம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொழுமங்குழி, சிறுகிணறு உள்ளிட்ட பகுதிகளில், புள்ளகாளிப்பாளையம் முதல் ராசிபாளையம், கள்ளிப்பாளையம் வரையிலான பல கிலோமீட்டர் தூரத்திற்கு சோலார் நிறுவனத்தின் சார்பில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலையின் இருபுறங்களிலும் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதால், ஏற்கனவே குறுகலாக உள்ள சாலையில் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பள்ளி நேரங்களில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் விலகிச் செல்ல போதிய இடவசதி இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியில் சாலைகள் ஏற்கனவே பழுதடைந்துள்ள நிலையில், கல்குவாரிகளுக்குச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் மின் கம்பங்களுக்கு அருகில் செல்லும்போது போதிய பக்கவாட்டு இடமின்றி கம்பங்களில் மோதும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஏ.ஜி.எஸ். சோலார் நிறுவனத்திடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இன்று சோலார் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சத்தியபாமா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சோலார் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை உரிய முறையில் அகற்றி, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது தெற்கு நகர செயலாளர் அபுதாஹிர், வடக்கு நகர செயலாளர் கதிர், கவுன்சிலர் நாகராஜ், கலைப் பிரிவு லட்சுமணன், குண்டடம் சோமு, செல்வபிரகாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம் செயலாளர் சத்தியபாமா வலியுறுத்தினார்.

சோலார் மின் கம்பங்கள் அமைக்கும் பணியால் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஏற்கனவே பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *