காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.
பழமையான இத்திருக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி நாளிலும் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு, திருமணம், பதவி உயர்வு கிடைப்பதாக ஐதீகம்.
ஆடிப்பூரம் நாளில்தான் பார்வதிதேவி அவதாரம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. பூமிதேவி ஆண்டாளாக புவியில் தோன்றியதும் ஆடிப்பூரமாகும்.
இந்த நாளில் அம்மன் திருக்கோயில்களில் விசேஷ உற்சவங்களும் பூசைகளும் நடைபெறுகின்றன. அன்றைய நாளில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் மேற்கொள்ளப்படுவது சிறப்பு. அன்று அம்மனுக்கு வளைகாப்பு செய்வதாகவும் ஐதீகம்.
இத்திருக்கோயிலில் பிரகாரத்தில் தனி சந்நிதியில் காட்சியருளும் அருள்மிகு தேவி கருமாரி திரிபுர சுந்தரி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் பூசைகளும் நடைபெற்றன.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு இந்த அம்மன் சந்நிதி மண்டபம் முழுதும் மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவத்தை முன்னிட்டு வியாழனன்று மாலையில் அம்மனுக்கு முதல் கால யாக பூசையும் வெள்ளியன்று காலையில் இரண்டாம் கால யாக பூசையும் நடைபெற்றது.
இன்று காலையில் வல்லக்கோட்டை மாடவீதியில் உள்ள சிவன் கோயிலில் இருந்து பூக்கூடைகள் ஊர்வலமாக புறப்பட்டு தேவி கருமாரி திரிபுர சுந்தரி அம்மன் சந்நிதிக்கு எடுத்துவரப்பட்டன.
காலை 11.30 மணிக்கு அம்மனுக்குப் பூச்சொரிதல் எனும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஐந்து அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓதிட ஒவ்வொரு கூடையிலிருந்து புஷ்பங்களை எடுத்து அம்மனுக்குச் சமர்பித்தனர். கருவறை அம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து முருகப்பெருமானையும் தேவி கருமாரி திரிபுர சுந்தரி அம்மனையும் வழிபட்டனர். வந்திருந்த பக்தர்களுக்கு அம்மன் பிரசாதமாக பூசிக்கப்பட்ட வளையல், மஞ்சள், தாலிக்கயிறு, பூச்சரம் பிரசாதமாக வழங்கப்பட்டன.
உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்திட ஏதுவாக திருக்கோயில் நிர்வாகத்தினரால் நிழற்பந்தலுடன் கியூ வரிசை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு இருந்தது. திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் அன்னதானம் நீர்மோர் ஆகியவைகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
ஆடிப்பூரம் உற்சவ ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.