ஊமச்சிகுளம்,

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகே தவசிபுதூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்லம்பட்டி கருப்புசாமி திருக்கோவிலில், அலங்காநல்லூர் ஸ்ரீ முனியாண்டிசுவாமி ஆட்டோ நிலைய நண்பர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் அறுசுவை அசைவ அன்னதானம் நடைபெற்றது.
இதையொட்டி, ஆட்டோ சங்கத் தலைவர் பாலமுருகன், செயலாளர் கணேசன், பொருளாளர் தெய்வேந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை கோவில் முன்பு நிறுத்தினர். பின்னர், வெற்றிலை பாக்கு, தேங்காய், எலுமிச்சை, வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை படைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து, அறுசுவை அசைவ உணவுகள் இறைவனுக்கு படைக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலங்காநல்லூர் ஸ்ரீ முனியாண்டிசுவாமி ஆட்டோ நிலைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.