கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு நியூ தில்லை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நியூ தில்லை நகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலைகளில் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்த சாலைகளை கடந்து செல்லும்போது தடுமாறி விழும் நிலை ஏற்படுவதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் தொடர்ந்து இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
“ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலை போடப்படவில்லை; பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை” என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான தரமான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டிய நிலையில், தங்கள் பகுதியில் சாலை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்வதாகவும், இதனை சம்பந்தப்பட்ட 36-வது வார்டு கவுன்சிலர் கண்டு கொள்வதே இல்லை எனவும் அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தேர்தல் நேரங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்குறுதிகள் வழங்கும் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகளிலும் அதே அளவு கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒருபுறம் கோவை மாநகராட்சி பல்வேறு வார்டுகளில் சாலை மற்றும் பொதுமக்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், 36-வது வார்டு நியூ தில்லை நகர் பகுதியில் சாலை பிரச்சினை நீடிப்பது ஏன்? என்ற கேள்வியையும் அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.
குண்டும் குழியுமான சாலைகளால் தினசரி பொதுமக்களின் உயிருக்கும், வாகனங்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நியூ தில்லை நகர் பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சாலைகளின் தற்போதைய நிலையை முழுமையாக ஆய்வு செய்து, தற்காலிகமாக பள்ளங்களை மூடுவதுடன் நிறுத்தாமல், தரமான புதிய தார் சாலை அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையை 36-வது வார்டு கவுன்சிலரும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“சாலை எப்போது போடப்படும்? எங்கள் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?” என்பதே நியூ தில்லை நகர் மக்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது.