நாகப்பட்டினம்,ஆக.14-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் அமைத்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் ஆடிபூரம் தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வளையல்களை ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கினார். அதில் 5008 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுமங்கலி பொருட்கள் வழங்கப்பட்டது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.