நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் அருள்மிகு சதுரங்கவல்லபநாதர் கோவிலில், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சர்க்கரை திருப்பாவாடை விழா சிறப்பாக நடைபெற்றது.

பழமையும், சிறப்பும் வாய்ந்த இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எலிக்கடி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பரிகாரமாக வேர் கட்டும் நிகழ்வு நடைபெற்று வருவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சர்க்கரை திருப்பாவாடை விழாவையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் சன்னதியில் சர்க்கரை பொங்கல் படையலிடப்பட்டு, அதில் நெய் ஊற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அம்மனை நெய்க்குள தரிசனம் செய்து வழிபட்டனர்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் பூவனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *