முத்துப்பேட்டை, ஆக. 14:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சித்தமல்லி, நொச்சியூர், செருகளத்தூர், குமட்டித்திடல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, ஏராளமான பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தமல்லி கடைத்தெருவில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களை கைகளில் ஏந்தியபடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுக்கும் அவலம்
சித்தமல்லி, நொச்சியூர், செருகளத்தூர், குமட்டித்திடல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாட தேவைகளுக்குக்கூட கடும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
.காலிக்குடங்களுடன் மறியல்:
இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் சித்தமல்லி கடைத்தெருவில் திரண்டு, காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்றும், நீண்டகாலமாக நீடித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத அரசையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் கண்டித்து பொதுமக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முத்துப்பேட்டை–மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் முக்கிய போக்குவரத்து வழித்தடமான முத்துப்பேட்டை–மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். மேலும், நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.