மன்னார்குடி, ஆக. 14:
மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரில் செயல்பட்டு வரும் நாய் நல காப்பகத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட ஆர்.பி.சிவம் நகரில் நாய் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. விபத்துகளில் சிக்கிய மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு இங்கு பராமரிப்பு, உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காப்பகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தங்கள் பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சம் ஏற்படுவதாகவும் கூறினர்.

இதுகுறித்து மன்னார்குடி நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், நாய் நல காப்பகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் பலமுறை மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் நகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜ்கமல் மற்றும் நகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நாய் நல காப்பகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 20 நாட்களுக்குள் நாய் நல காப்பகத்தை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *