மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத் திருவிழாவில், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான “கருங்குருவிக்கு உபதேசித்தல்” திருவிளையாடல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன் பிரியாவிடையும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத் திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா உள்ளிட்டவை சிறப்பு பெற்றவை. ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல்கள் சிறப்பு நிகழ்வுகளாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், இறைவனின் திருவிளையாடல்களை உணர்த்தும் வகையில் தினமும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் வீதி உலாக்கள் நடைபெறுகின்றன.
கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல்
முற்பிறவியில் பல்வேறு புண்ணிய காரியங்களைச் செய்திருந்தாலும், சிறிதளவு பாவம் செய்ததன் காரணமாக ஒருவர் மறுபிறவியில் கருங்குருவியாக பிறந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அந்தக் கருங்குருவியை காகங்கள் துன்புறுத்தியதால், அது அஞ்சி வெகுதூரம் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்து தனது நிலையை எண்ணி வருந்தியது.
அப்போது அந்த மரத்தின் கீழ் நின்ற சிலர், மதுரைக்கு சென்று பொற்றாமரைக்குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்று பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கேட்ட கருங்குருவி மதுரைக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டது.
கருங்குருவியின் பக்தியைக் கண்டு மனமிரங்கிய சோமசுந்தரர், அதற்கு மிருத்யுஞ்சிய மந்திரத்தை உபதேசித்ததாக ஐதீகம் கூறுகிறது. மேலும், கருங்குருவி இனத்திற்கு இருந்த “எளியான்” என்ற பெயரை மாற்றி “வலியான்” என சிவபெருமான் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை நினைவுகூரும் வகையில் நேற்று சுந்தரேஸ்வரர் கருங்குருவிக்கு உபதேசம் அளித்த திருக்கோலத்தில் எழுந்தருளினார். இரவு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடரும் திருவிளையாடல் நிகழ்ச்சிகள்
இன்று (திங்கட்கிழமை) நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலையும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாணிக்கம் விற்ற லீலையும் நடைபெறுகின்றன. 19-ந்தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 20-ந்தேதி உலவாக்கோட்டை அருளியது, 21-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு ஆகிய திருவிளையாடல்கள் நடைபெறுகின்றன.
22-ந்தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. 23-ந்தேதி நரியை பரியாக்கிய லீலை, 24-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, 25-ந்தேதி விறகு விற்ற லீலை ஆகியவை நடைபெற உள்ளன.
26-ந்தேதி சட்டத்தேர் வீதி உலாவும், 27-ந்தேதி தீர்த்தவாரியுடன் ஆவணி மூலத் திருவிழா நிறைவடைகிறது.