திருவாரூர். ஆக.17
திருவாரூர்: தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை திருவாரூரில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா பகுதிகளில் எல்நினோ தாக்கம் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியை முற்றிலும் இழந்துள்ள நிலையில், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, காவிரி டெல்டாவில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதற்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், எல்நினோ தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க மாநில அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மேகதாது அணை விவகாரத்தில், தமிழக கீழ்பாசன விவசாயிகளின் உரிமைகள் பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணாக கர்நாடக அரசு செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது. மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மூலம் எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கேரள அரசு செயல்பட மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

சென்னையில் நடைபெற உள்ள தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை வரவேற்கிறோம். தென் மாநிலங்களில் நதிநீர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதித்து சட்டப்படி நடக்க கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

மேலும், நதிநீர் பிரச்சினைகளில் மாநிலங்களுக்கு இடையே சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் உரிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் வி.சுவாமிநாதன், திருவாரூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்பையன், மாவட்டச் செயலாளர் ஜி.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *