மன்னார்குடி, ஆக.21:

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் மற்றும் பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. திலகர் தலைமை வகித்தார். முதுகலை இயற்பியல் ஆசிரியர் முனைவர் எஸ். அன்பரசு முன்னிலை வகித்தார். விலங்கியல் ஆசிரியை ஜி. இளவேனில் வரவேற்றுப் பேசினார்.

கருத்தரங்கில் அரசு மாவட்ட மருத்துவமனையின் சிகிச்சை மேற்பார்வையாளர் எஸ். மங்கள கணேசன், மருத்துவ உளவியல் ஆற்றுநர் வி. சத்யா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்புநர்கள் டி. லோகாம்பிகை, பி. சத்தியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பெண்களின் உடல்நலம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான பல்வேறு தகவல்களை விளக்கமாக எடுத்துரைத்தனர்.

மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து விளக்கம்

கருத்தரங்கில் மாணவிகளுக்கு மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள், சத்துக்குறைபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள், உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பெண்களுக்கு ஏற்படக்கூடிய பால்வினை நோய் தொற்றுகள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், நீர்க்கட்டிகள், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் குறித்தும், அவற்றின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் மருத்துவக் குழுவினர் எடுத்துரைத்தனர்.

மாணவிகள் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொண்டு, உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் தயக்கமின்றி பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் தெரிவித்து உரிய ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

நாப்கின் எரியூட்டும் இயந்திரம் குறித்து செயல்விளக்கம்

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின்களை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளிகளில் பயன்படுத்தப்படும் நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை பாதுகாப்பாகவும் முறையாகவும் பயன்படுத்தும் விதம் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாப்பதுடன், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.

அரசு மருத்துவ சேவைகள் குறித்து விளக்கம்

மேலும், பொதுமக்களுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் பல்வேறு மருத்துவ வசதிகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை சேவைகள் குறித்தும் மருத்துவக் குழுவினர் விளக்கினர். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

மாணவிகளின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கும், இளம் வயதிலேயே பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இதுபோன்ற கருத்தரங்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

கருத்தரங்கில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக என்சிசி அதிகாரி எஸ். திவாகர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *