கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) ஜூனியர் ஜேசி பிரிவு மற்றும் பிசிஏ துறை சார்பில் ‘Know Yourself – Grow Yourself’ (உன்னை அறிந்துகொள் – உன்னை வளர்த்துக்கொள்) என்ற தலைப்பில் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை வளர்ச்சி கருத்தரங்கம் திங்கட்கிழமை நடைபெற்றது.
கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் யூஜின் அமலா முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். இதில் மாணவிகளிடையே தன்னம்பிக்கை, தலைமைத்துவத் திறன், தனித்திறமைகளை கண்டறிதல் மற்றும் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜேசிஐ தேசிய பயிற்சியாளர் ஜேசி ஏ.ஸ்ரீநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு தலைமைத்துவ பண்புகள், வெற்றிக்கான வழிமுறைகள் மற்றும் தன்னை அறிந்து கொள்வதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஜேசி அறிவழகன், ஜேசிஐ குறித்த ஓரியண்டேஷன் நிகழ்ச்சியை நடத்தி ஜேசிஐ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
இந்நிகழ்ச்சியை ஜேசிஐ கும்பகோணம் மகாமகம் சிட்டி கிளை தலைவர் ஜேஎஃப்எம் பொறியாளர் ஆர்.அருண்பிரகாஷ், செயலாளர் ஜேஎஃப்எம் எஸ்.ராஜசேகர், பொருளாளர் ஜேசி எச்ஜிஎஃப் ஏஆர்.எஸ்.மோதீஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிசிஏ துறை உதவி பேராசிரியை பி.யுவஸ்ரீ செய்திருந்தார். இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்