7.5 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு – கடைகளுக்கு அபராதம்
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கடைகள் செயல்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
பொதுவாக, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்யும்போது, அந்த ஆடு சுகாதாரமான நிலையில் உள்ளதா என்பதை நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டியில் கால்நடை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பரிசோதனைக்குப் பிறகு நகராட்சி சார்பில் முத்திரை அல்லது சீல் வைக்கப்பட்ட பின்னரே இறைச்சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.
ஆனால், சில இடங்களில் ஒரு ஆட்டிற்கு மட்டும் நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டியில் பரிசோதனை செய்து சீல் பெற்றுக் கொண்டு, அந்த சீலை முன்னிறுத்தி, முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத பல ஆடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், தேனி நகராட்சி பகுதிகளில் சில இறைச்சிக் கடைகள் சாக்கடை கால்வாய்களின் அருகிலும், அதன் மீது அமைந்துள்ளன. சாக்கடைகளில் தேங்கும் கழிவுநீரில் மொய்க்கும் ஈக்கள், கடைகளில் விற்பனை செய்யப்படும் இறைச்சி மற்றும் மீன்களின் மீது அமர்வதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்வதால், அவற்றை வாங்கி உண்பவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு, பொதுமக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. வைத்திநாதன் உத்தரவின் பேரிலும், நகராட்சி ஆணையாளர் செல்வி எஸ். பார்கவி அறிவுறுத்தலின் பேரிலும், தேனி நகரின் முக்கிய பகுதிகளான பங்களாமேடு, மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கான்வென்ட், அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி-அல்லிநகரம் நகராட்சி மற்றும் வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற இந்த திடீர் சோதனையில் மொத்தம் 23 இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின்போது, கெட்டுப்போன நிலையில் இருந்த 7.5 கிலோ இறைச்சி மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அழிக்கப்பட்டன. மேலும், சுகாதாரமற்ற முறையில் கடைகளை நடத்தி வந்த உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006-ன் கீழ் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாக வசூலிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் தரமான இறைச்சி மற்றும் மீன்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், கடைகளில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இறைச்சி மற்றும் மீன் கடைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.