தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
.
குண்டடம்:
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே ஈஸ்வரசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீருந்து நிலையத்தில், மாவட்ட கலெக்டர் மணீஷ் எஸ். நர்னாவேர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈஸ்வரசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 5 முதல் 6 மாதங்களாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் வகையில், மாவட்ட கலெக்டர் மணீஷ் எஸ். நர்னாவேர் ஈஸ்வரசெட்டிபாளையம் நீருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, நீருந்து நிலையத்திற்கு வரும் குடிநீரின் அளவு, நீர் சேமிப்பு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் திட்ட மாவட்ட செயற்பொறியாளர் செல்வராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் கமலக்கண்ணன், திட்ட மேற்பார்வை பொறியாளர் விநாயகம், முத்தூர்–காங்கயம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் கீதாலட்சுமி, குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரியா, ஆலமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.