மன்னார்குடி., செப். 17-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஜேசிஐ வார விழாவின் நிறைவு விழா மற்றும் செம்மைப் பணி விருது வழங்கும் விழா, பின்லே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு ஜேசிஐ மன்னை அமைப்பின் தலைவர் எம்.இ. தென்னரசு தலைமை வகித்தார். முன்னாள் மண்டலத் தலைவர் வி.எஸ். கோவிந்தராஜன், தொழிலதிபர் ஜெ. ராஜேஷ், மண்டல இயக்குனர் வினோத் விவேகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஜேசிஐ மண்டலத் தலைவர் டி. விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமூகத்தின் பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் சிறப்பாளர்களை பாராட்டி, அவர்களுக்கு செம்மைப் பணி விருதுகளை வழங்கினார்.
இதன்படி, மன்னார்குடி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் விநியோகஸ்தர் சி. பக்கிரிசாமி, அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் கே. சீனிவாசன், நடத்துநர் என். செந்தில்குமார், மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் என். அபிராமி, வடுவூர் நூலகர் கா. திலகவதி, பைங்காநாடு க. இந்திரா, போக்குவரத்துக் காவல்துறையின் சிறப்பு உதவியாளர் வி. ரமேஷ், நகராட்சி தூய்மைப் பணியாளர் ஆர். போதும் பொண்ணு, சார்நிலை கருவூல கணக்கர் ச. பத்ரு நிஷா, எல்.ஐ.சி. கிளையின் துணை மேலாளர் வினிகுமாரி ஆகியோருக்கு செம்மைப் பணி விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர் சூர்யா பிரகாசமூர்த்திக்கு சிறந்த இளைஞர் விருது வழங்கப்பட்டது. தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொழிலதிபர் ஜெ. ராஜேஷ்க்கு சிறந்த தொழிலதிபர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் விழாவில் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது. தேசிய மேல்நிலைப் பள்ளியின் முனைவர் எஸ். அன்பரசு, வடகோவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் அ. முரளி, மூவாநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் கோ. நளினி, அகரப்பொதக்குடி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. ராஜலட்சுமி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் டி. விக்னேஷ், சமூகத்தில் பல்வேறு துறைகளில் தன்னலமின்றி பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் சிறப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் சேவையை பாராட்டுவது முக்கியமானதாகும். இதுபோன்ற பாராட்டு நிகழ்வுகள் சமூகப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்றார்.
முன்னதாக ஜேசிஐ வார விழாவின் தலைவர் பி. குணசேகரன், வார விழா நிகழ்ச்சிகளின் அறிக்கையை வாசித்தார். விழாவில் ஜேசிஐ அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், விருது பெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக ஜேசிஐ மன்னை அமைப்பின் செயலாளர் ஜி. மூர்த்தி நன்றி கூறினார். விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஜேசிஐ மன்னை அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.