தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் கம்பம் சட்டமன்ற தொகுதி அளவிலான எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி எம் எல் ஏ அலுவலகத்தில் உள்ள பி.எல் ஏ. கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார் நேதாஜி அறக்கட்டளை நிறுவன தலைவரும் எழுத்தாளருமான சோ. பஞ்சு ராஜா, அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கம்பம் தொகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கவுரவித்து, பரிசுகள் மற்றும் கேடயங்களை பாராட்டி பேசினார்

பின்னர் அவர் பேசியது

எழுத்தாளர்களை ஊக்குவிப்பது சமூகத்தின் கடமை. இளைஞர்கள் தங்களது எண்ணங்களையும், சமூகத்தின் மீதான பார்வையையும் எழுத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

கம்பம் பள்ளத்தாக்கு நெல் அறுவடைக்கு மட்டுமல்ல; இனி சொல் அறுவடைக்கும் பெயர் பெற வேண்டும். கடந்த காலங்களில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் எழுதிய நூல்களுக்கு அணிந்துரை எழுதி, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளேன்.

ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் பாராட்டு, அவரது அடுத்த படைப்புக்கான விதையாக அமையும். எனவே, ஏற்கனவே எழுதி வருபவர்களுடன், புதிதாக எழுதத் தொடங்கும் இளம் படைப்பாளிகளையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்.

வயலில் விளையும் நெல் உடலுக்கு உணவாகிறது; எழுத்தில் விளையும் நல்ல சிந்தனைகள் சமூகத்துக்கு அறிவாகின்றன. அந்த வகையில் எழுத்தாளர்களின் படைப்புகள் மக்களுக்கு வழிகாட்டியாகவும், இளைய தலைமுறைக்கு நல்ல பாதையை காட்டுவதாகவும் அமைய வேண்டும்.

கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள் உருவாக வேண்டும். அவர்களின் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *