முதுகுளத்தூர்
செய்தயாளர்
ஆர்.செந்தில்குமார்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா – அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்பு
இராமநாதபுரம் செப் 20,
இராமநாதபுரம் மாவட்டம், குதக்கோட்டை ஊராட்சி, வள்ளிமடன்வலசை கிராமத்தில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களுக்கு, இராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் தமிழக வெற்றிக் கழகம் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் தலைமையில், மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, வாகன அணிவகுப்புடன் அமைச்சரை பட்டமளிப்பு விழா நடைபெறும் இடத்திற்கு மாவட்ட செயலாளர் மதன் அழைத்துச் சென்றார்.
பட்டமளிப்பு விழாவை தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களம் வட்டம், உப்பூரில் நடைபெற்று வரும் அனல்மின் நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜு, மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
முன்னர் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு நீதியரசர் செல்வி பூர்ணிமா அவர்கள் மற்றும் மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் ஆகியோர், சட்டக் கல்வியை நிறைவு செய்த 237 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் பேசுகையில், அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் விடுதி வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், சட்டக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு முறையாக பட்டமளிப்பு விழாக்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காணும் வகையில் போக்சோ மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்துதல், நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து 160 நீதிமன்றங்களை ஒரே வளாகத்தில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மின்னணு தாக்கல் மற்றும் இணையவழிக் கட்டணம் உள்ளிட்ட நீதிமன்ற சேவைகள் நவீனப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையான நீதிமன்றங்களை ஏற்படுத்துதல், வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், அரசு அதிகாரிகள், அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ஜேம்ஸ் ஜெயபால், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.