தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை, இருப்பு மற்றும் விநியோகத்தை தடுக்கும் வகையில் மாநகராட்சியின் ஆணையாளர் தலைமையில் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் 18.09.2026 அன்று மாலை 4.00 மணியளவில் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில செயல் தலைவர் திரு.விநாயக மூர்த்தி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை செய்பவர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநகர நல அலுவலர் டாக்டர் S.R.கணேஷ் அவர்கள் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை குறிப்பாக தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கடல் எவ்வாறெல்லாம் மாசு அடைகின்றது, அதனால் மீன் வளம் பாதிக்கப்படுவதையும் விளக்கிக் கூறினார். அதன்பின்னர் பேசிய ஆணையாளர் அவர்கள், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் வடிகால்களில் அடைப்பு ஏற்படுதல், பக்கிள் ஓடை கடும் மாசு அடைந்துள்ளதையும் பொதுச் சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்து, தூத்துக்குடியை பாதுகாக்கும் முயற்சியை மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பில் வைத்திருப்பதையும், விற்பனை செய்வதையும் தவிர்த்து அரசால் அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளர் திரு.கண்ணன் கலந்து கொண்டு தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் எவை எவை என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்தார். அனுமதியின்றி ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் இயங்குவது தெரிந்தால் தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

வணிகர்கள் சார்பில் பேசும்போது, மாநகராட்சிக்குள் கடைகள் வைக்காத பலர் வீடுகளுக்குள் கேரி பைகளை பதுக்கி சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் விற்பனையை அதிகப்படுத்தி விட்டதாகவும், அவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் வணிகர்கள் சார்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை விற்பனை செய்ய, பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆணையாளரிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஆணையாளர் அவர்கள், முத்துநகர் கடற்கரை, ரோச் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்கா பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்தும், அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார். வருங்காலங்களில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் பறிமுதல் மற்றும் அபராதங்கள் கடுமையாக்கப்படும் என்பதை தெரிவித்தார். வணிகர்கள் சார்பில் தங்களது ஒத்துழைப்பை தருவதாக தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *