கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ ஐ சி யு சி தொழிற்சங்கத்தின் சார்பில் கும்பகோணம் கோட்டத்திற்கு புதிதாக பொறுப் பேற்றுள்ள மேலாண் இயக்குனரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவில் கூறப் பட்டுள்ளதாவது, தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம் பேசப்பட்டு இரண்டு வருடமாகியும் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் அகவிலைப்படி உயர்வு மற்றும் விடுப்பு ஒப்படைப்பு தொகை ஏறத்தாழ 20 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளதையும் வழங்க வேண்டும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர்,
தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த 2026 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. ஓய்வு பெற்றவர்களின் குடும்ப துன்பநிலை கருதி ஓய்வுகால பணப்பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும்,
தற்போது புதிய பேருந்துகள் நிறைய இயக்குகின்ற நிலையில் தொழில்நுட்ப பணியாளர் களுக்கு பழுது பார்க்க வேண்டிய உபகரணங்கள், அதேபோல தரமான உதிரி பாகங்களை வழங்க வேண்டும், தற்போது தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் தொழிலாளர் களுக்கு பரவாமல் தடுப்பதற்கு முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பணிமனைகள், பேருந்து நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மேலாண் இயக்குனரிடம் அளிக்கப்பட்டது.
மேலாண் இயக்குநரை சந்திக்கும் நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் மத்திய சங்கத் தலைவர் என்.சேகர், பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச் செல்வன், பொருளாளர் சி.ராஜமன்னன் நிர்வாகிகள் எம்.பி.இளங்கோவன், என்.ஆர்.செல்வராஜ், என்.ராஜேஷ் கண்ணன், பி.வீரையன், எஸ்.பழனியப்பன், ஜி.சுரேஷ்குமார் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.